அனைவருக்கும் வணக்கம். இன்று நான் ஆயுள் காப்பீட்டு என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன? என்பதை பற்றித் தான் விளக்கமாக இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஒரு ஆண் தன் மனைவி, குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறான். இப்பொழுது திடீரென்று அந்தக் கணவன் இறந்தாலுமே, மனைவி தன்னையும் தன் குழந்தைகளையும், எந்த ஒரு நபரின் தயவும் இல்லாமல், நல்ல படியாகச் சந்தோசமாகப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு சட்டம் இருக்கிறது. இப்பொழுது ஒரு வீட்டில் மாதம் 40,000 ரூபாய் சம்பாதிக்கும் கணவராக இருந்தாலும் சரி, மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் கணவராக இருந்தாலும் சரி, துரதிஷ்டவசமாக ஒரு நாள் அந்தக் கணவர் இறந்து விட்டார் என்றால், அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுவார்கள்.
அப்படி அந்தக் கணவர் இருந்தாலும், தன்னையும், தன் குழந்தைகளையும் அவரின் மனைவியே நல்ல முறையில் காப்பாற்றிக் கொள்ள முடியும். அதற்குத் தான் "மேரிடு உமன்ஸ் பிராப்பர்ட்டி ஆக்ட்" (1874) என்ற ஒரு சட்டம் இருக்கிறது. தமிழில் "திருமணமான பெண்ணின் சொத்துச் சட்டம்". அதாவது வேறு ஒன்றும் இல்லை. நாம் நம் வாழ்க்கையின் பாதுகாப்பிற்கு ஒரு காப்பீடு எடுக்கிறோம் அல்லவா? அது தான்.
அதுக்கு மருத்துவ காப்பீடாக இருந்தாலும் சரி, ஆயுள் காப்பீடாக இருந்தாலும் சரி. இன்னும் நிறைய பேர் இனி மேல் தான், ஏதாவது ஒரு காப்பீடு எடுக்கலாம் என்று திட்டம் போட்டு வைத்திருப்பார்கள். அவர்களுக்காகவே இருக்கும் ஒரு நல்ல சட்டம் தான் "மேரிடு உமன்ஸ் பிராப்பர்ட்டி ஆக்ட்." அதெல்லாம் சரி தான். இந்தச் சட்டத்திற்கும், காப்பீட்டிற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றும்.
இப்பொழுது உங்கள் வீட்டில் உங்கள் கணவர் தொழிலதிபராகவும் இருக்கலாம், தினசரி வேலைக்குச் சென்று உழைக்கும் கணவராகவும் இருக்கலாம், ஏதாவது ஒரு காரணத்திற்காக, நெருக்கடிக்காகத், தேவைக்காக வங்கியில் கடன் வாங்கி வைத்திருப்பார்கள் அல்லது கடன் கிடைக்காதவர்கள் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி வைத்திருப்பார்கள் உங்களுக்குத் தெரியாமல். இப்பொழுது திடீரென்று ஒரு நாள் உங்கள் காணவர் இறந்து விட்டார் என்றால், கடன் கொடுத்தவர்கள் அந்த வீட்டிற்குச் சென்று கடன் வாங்கியவரின் குடும்பத்தைத் தொல்லை செய்வார்கள். இந்த நேரம் பார்த்து அந்தக் கணவர், ஏதாவது ஒரு காப்பீடு எடுத்து வைத்திருந்தார் என்றால், அப்படி வரும் அந்தக் காப்பீட்டுப் பணத்தை கடன் கொடுத்தவர்கள் சொந்தம் கொண்டாடவும் முடியும், வழக்கு தொடுத்து நீதி மன்றமும் செல்ல முடியும். நமக்கு ஏதாவது ஆகிவிடும் என்று தான் ஒரு பாதுகாப்பிற்கு காப்பீடு எடுத்து வைக்கிறோம். அந்தக் காப்பீட்டு பணத்திற்கே பாதுகாப்பு இல்லை என்று சொல்லும்போது நாம் என்ன செய்வது.
அதற்குத் தான் இந்த "மேரிடு உமன்ஸ் பிராப்பர்ட்டி ஆக்ட்" சட்டம் உதவுகிறது. நாம் எந்தக் ஆயுள் காப்பீட்டு எடுத்தாலும் சரி, அதை இந்தச் சட்டத்தின் கீழ் எடுத்தோம் என்றால், செக்சன் ஆறு படி, அதில் வரக்கூடிய காப்பீட்டுப் பணத்தைக் கடன் கொடுத்தவர்களோ, இல்லை வாங்கியோ, மற்ற யாருமோ சொந்தம் கொண்டாடவே முடியாது. அந்த முழுப் பணமும் அவரின் மனைவிக்கும், அவரின் குழந்தைகளுக்கும் தான் போய்ச் சேரும். சரி, இந்தச் சட்டத்திற்கு கீழ், ஆயுள் காப்பீடு யாரெல்லாம் எடுக்கலாம் என்றால், தொழிலதிபர்கள் எடுக்கலாம் அல்லது வேலைக்குச் செல்பவர்கள் எடுக்கலாம், யாராக இருந்தாலும் அவர்களுக்குத் திருமணம் ஆகி இருக்க வேண்டும்.
இல்லை இந்தச் சட்டத்தின் கீழ் எனது கணவர் ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை அல்லது மனைவியே, கணவனிடம் ஆயுள் காப்பீடு எடுங்கள் என்று கூறினாலும் கணவர் காப்பீடு எடுக்க மாட்டிக்கிறார் என்றாலும், மனைவியேத் தங்கள் பெயரில் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். நாமினியாக அவர் தங்கள் குழந்தைகளின் பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இந்தச் சட்டத்தின் படி, ஆயுள் காப்பீடு கணவனோ, மனைவியோ யார் எடுத்தாலும் சரி நாமினியாக மனைவி, குழந்தைகள் பெயரைத் தான் சேர்க்க முடியும். வேறு யாருடைய பெயரையும் நாமினியாகச் சேர்க்க முடியாது. ஒரு தடவை நாமினியாக ஒரு பெயரைக் கொடுத்து விட்டோம் என்றால், அதை எப்பொழுதுமே மாற்ற முடியாது. இந்தச் சட்டத்தின் கீழ், நாம் செலுத்தும் காப்பீட்டு பணத்திலிருந்து, நாம் ஏதும் லோன் வாங்கிக் கொள்ள முடியாது. காப்பீட்டுப் பாலீசியை முன் கூட்டியே முடித்துக் கொள்ளவும் முடியாது.
இந்தச் சட்டத்தின் கீழ் காப்பீடு எடுப்பதற்கு என்னென்ன ஆதாரங்கள் கொடுக்க வேண்டும் என்றால்,
1.) ஆதார் கார்டு நகல் கொடுக்க வேண்டும்.
2.)வேலைக்குச் செல்பவராக இருந்தால் மூன்று மாத "பே ஸ்லிப்". அதாவது, சம்பளக் கவர் கொடுக்க வேண்டும்.
3.)தொழிலதிபராக இருந்தால் 3 வருட வருமான வரி செலுத்திய பில் கொடுக்க வேண்டும்.
4.) பான் கார்டு நகல் கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு, இந்தச் சட்டத்தின் கீழ் காப்பீடு எங்கெல்லாம் சென்று எடுக்கலாம் என்றால், சாதாரணமாக, நாம் வீட்டிற்கு அருகில் இருக்கும் இன்சூரன்ஸ் ஏஜென்சிக்கு சென்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி இன்சூரன்ஸ் எடுக்கும்போது இந்தச் சட்டத்தின் கீழ் எடுக்க வேண்டும். ஏற்கனவே நாம் எடுத்த இன்சூரன்ஸ் பாலிசிக்கு இந்தச் சட்டம் பொருந்துமா? என்றால் கண்டிப்பாகப் பொருந்தாது. புதிதாக எடுக்கப் போகும் காப்பிட்டு கொள்கைக்குத் தான் இந்தச் சட்டம் பொருந்தும்.
இந்தச் சட்டத்தின் கீழ், காப்பீடு எடுப்பதற்கு வயது வரம்பு என்ன?
காப்பீட்டு வரம்பு என்ன என்று கேட்டால், இப்பொழுது ஒருவரின் வயது 18 முதல் 35 வயது வரை இருந்தால், அவரின் ஆண்டு வருமானத்தில் 25 மடங்கு தான் காப்பீட்டின் எல்லையாக இருக்கும். இப்பொழுது உதாரணத்திற்கு, என்னுடைய வயது 30 வயது இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்னுடைய ஆண்டு வருமானம் 3 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆண்டு வருமானத்தில் 25 மடங்கு. அதாவது, 75 லட்சம் தான் என்னுடைய காப்பீட்டின் வரம்பாக இருக்கும். இப்பொழுது நான் மாதம், மாதம் செலுத்த வேண்டிய பணம் ஜி.எஸ்.டி. எல்லாம் சேர்த்து எவ்வளவு இருக்கும் என்றால் 1000 அல்லது 1200 இருக்கும்.
அப்படித் தான் எனக்குக் கூறினார்கள். அதுவே, ஒருவரின் வயது 36 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருந்தால், அவரின் ஆண்டு வருமானத்தில் 20 மடங்கு தான் காப்பீட்டின் வரம்பாக இருக்கும். அதுவே, ஒருவரின் வயது 46 வயதிலிருந்து 50 வயதுக்குள் இருந்தால், அவரின் ஆண்டு வருமானத்தில் 15 மடங்கு தான் காப்பீட்டின் வரம்பாக இருக்கும். அதுவே, ஒருவரின் வயது 51 வயதிலிருந்து 60 வயதுக்குள் இருந்தால், அவரின் ஆண்டு வருமானத்தில் பத்து மடங்கு தான் காப்பீட்டின் வரம்பாக இருக்கும். அதனால் எவ்வளவு சீக்கிரம் இந்தச் சட்டத்தின் கீழ், காப்பீடு எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் காப்பீடு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
ஏனென்றால் இந்தச் சட்டத்திற்கு கீழ், நாம் வாங்கும் சம்பளத்தை பொறுத்து, நம் வயதை பொறுத்து, நாம் ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டிய காப்பீட்டின் தொகை அதிகரிக்கும், குறையும். இந்தச் சட்டத்தின் கீழ், நாமினியாக இருப்பவர் இன்சூரன்ஸ் கிளைம் செய்து கொள்ளும்பொழுது எந்த ஒரு வரியும் கட்டத் தேவையில்லை. ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ், காப்பீடு எடுத்தவரின் கணவர் இறந்த பிறகு தான், இந்தக் காப்பீட்டுத் தொகையைக் கிளைம் செய்து கொள்ள முடியும். அதனால் ஒருவர் காப்பீடு எடுக்கும்பொழுது அவரின் முழு உடலையும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து இலவசமாகவே மருத்துவ பரிசோதனை செய்து விடுவார்கள்.
ஏனென்றால் அந்த மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நாள் பட்ட நோய் இருந்தது, அந்த நோய்க்கு அவர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவரால் காப்பீடு எடுத்துக் கொள்ள முடியாது. அவருக்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவர் நன்றாகத் தான் இருக்கிறார் என்றால், அவர் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். அப்படி அவர் காப்பீடு எடுத்துக் கொண்டு, துரதிஷ்டவசமாக மூன்று வருடத்திற்குள் இறந்து விட்டார் என்றால், உடனே காப்பீட்டு பணத்தை பெற முடியாது. அவர் எப்படி இறந்தார் என்று காப்பீட்டு நிறுவனம் நன்கு விசாரிப்பார்கள். அதைத் தெரிந்து கொண்ட பிறகு தான் காப்பீட்டு பணத்தை நாம் பெற முடியும்.
ஆனால், ஒரு வேளை காப்பீடு எடுத்ததிலிருந்து மூன்று ஆண்டுகள் கழித்து அவர் இறந்து விட்டால், காப்பீட்டு பணத்தைப் பெற்றுக் கொள்வதில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. காப்பீட்டு பணமும் உடனே கிடைத்து விடும். ஆனால் காப்பீடு எடுத்திருந்தவர் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. அப்படி அவர் தற்கொலை செய்து இருந்தால், இந்தச் சட்டத்தின் கீழ் காப்பீட்டு பணத்தை எப்பொழுதும் வாங்கவே முடியாது. வேறு எந்த விதமாக மரணம் ஏற்பட்டிருந்தாலும் நாம் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இன்னும் நம்மில் பல பேர் தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் இதுவரைக்கும் எந்த ஒரு காப்பீடும் எடுக்காமல் இருப்போம். அதனால் எதிர்காலத் தேவைக்காக நமது பாதுகாப்பிற்காக நல்ல ஒரு காப்பீடு எடுத்து வைத்துக் கொள்வது நல்லது தான். ஏனென்றால், நம்முடைய வீட்டில் நமது பொருளாதாரத் தேவையைச் சார்ந்து இருக்கின்ற நமது மனைவியும், குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு தான் இந்தச் சட்டம் இருக்கிறது. அது அந்தச் சட்டத்தின் பெயரிலே இருக்கிறது. "மேரிடு உமன்ஸ் பிராப்பர்ட்டி ஆக்ட்".
நான் உங்களை இந்தக் காப்பீடு எடுங்கள், அந்தக் காப்பீடு எடுங்கள் என்று நான் சொல்லவில்லை. இப்படியொரு சட்டம் இருக்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ், ஒரு ஆயுள் காப்பீடு எடுத்தால், இந்த மாதிரியான நன்மைகள் இருக்கிறது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் கூறுகிறேன். இனியாவது இதைப் பற்றி நிறைய பேர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
0 Comments