உலகத் தமிழர்களுக்குச் சங்கத் தமிழனின் அன்பு வணக்கங்கள். உலகத்தில் இருக்கும் பல ஆராய்ச்சியாளர்கள் எல்லோருமே, இந்தப் பூமியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இந்தப் பூமியின் பருவநிலையும் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது என்று கத்தி கத்தி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால், இந்த உலகில் உள்ள எந்த நாடுகளும் இதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. இந்தப் பருவநிலை மாற்றத்தின் விளைவாக, பல நாடுகளில் பருவ மழை சரியாகப் பெய்யாததால், வரட்சியாளும், காட்டுத்தீயாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரங்களில், மற்ற நாடுகளில் அதிக அளவு மழை பெய்வதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அழிந்தும் போயிருக்கிறது. இப்படி கடந்தாண்டு (2019) ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில், பூமியின் நுரையீரல் என்று சொல்லப்படுகின்ற, அமேசான் காடுப் பற்றி எரிந்ததில் பல லட்சக்கணக்கான காடுகள் சாம்பலாகப் போய்விட்டது.
இதே போல் கடந்தாண்டு (2019) ஆம் ஆண்டு கலிபோர்னியாவிலும் மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டது. இப்பொழுது இந்த ஆண்டு (2020) ஆஸ்திரேலிய கண்டம் முழுவதுமே காட்டுத் தீயால் பற்றி எரிகிறது. இப்படி ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டுத் தீயைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். பொதுவாக, ஆஸ்திரேலியாவில் வெப்பநிலை கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். அந்த நாட்டின் பருவநிலை கொஞ்சம் வறட்ச்சியாகத் தான் இருக்கும். ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ என்பது கோடைக் காலங்களில் மிகவும் சாதாரண ஒரு விஷயம் தான்.
ஆனால், இந்த ஆண்டு காட்டுத் தீ வரலாறு காணாத அளவிற்கு மிகத் தீவிரமாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பொதுவாக, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தான் காட்டுத் தீ அதிகமாக வரும். ஆனால் இந்த ஆண்டு இரண்டு மாதங்களுக்கு முன் கூட்டியே, காட்டுத் தீப் பரவ ஆரம்பித்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்த காட்டுத் தீக் கடந்த டிசம்பர் (2020) மாதம் இறுதியில் கிட்டத் தட்ட ஆஸ்திரேலியா முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதிகளான, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, மெல்போன், சிட்னி போன்ற முக்கிய நகரங்களில் எல்லாமே காட்டுத் தீயால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் அந்த நகரங்கள் முழுவதும் கடுமையான வெப்பத்தாலும், புகை மண்டலத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் காட்டுத் தீயால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது நியூ சவுத் வேல்ஸ் தான். அங்கு மட்டுமே, கிட்டத் தட்ட 1300 க்கும் அதிகமான வீடுகள் முற்றிலுமாக எரிந்து போயிருக்கிறது. ஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவையும் சேர்த்து கிட்டத் தட்ட ஒரு கோடி 47 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்தக் காட்டுத் தீயால் எரிந்து சாம்பலாகி இருக்கிறது. ஒப்பீட்டு அளவில் சொல்ல வேண்டுமானால், கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் காடுகளில் ஏற்பட்ட, தீயினால் கிட்டத் தட்ட ஒரு கோடியே 75 லட்சம் ஏக்கர் காடுகள் தீயினால் எரிந்து போய்விட்டது. இதில் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால், ஆஸ்திரேலியாலில் இனிமேல் தான் கோடைக் காலம் ஆரம்பிக்கப் போகிறது.
இந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அங்கு வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். இதனால், இப்பொழுது இருக்கும் காட்டுத் தீ இன்னும் வேகமாகப் பரவும் என்று சொல்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான தன்னால் தன்னார்வலர்களும், தீயணைப்பு வீரர்களும் கடுமையாக முயற்சி செய்துமே, மிகக் கடுமையாகப் பற்றி எரியும் இந்தத் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளும் இந்தத் தீயை அணைக்க உதவி செய்கிறார்கள். ஆனால், தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இந்தக் காட்டுத் தீயால் இதுவரைக்கும் 23 பேருக்கும் மேல் இறந்து போயிருக்கிறார்கள் என்று ஆஸ்திரேலிய அரசாங்கமே சொல்லியிருக்கிறார்கள். இந்தக் காட்டுத் தீயால் மனிதர்களைவிட, அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது, அங்கு வாழும் வன விலங்குகள் தான். பொதுவாக, ஆஸ்திரேலியாவில் பல்வேறு வகையான வித்தியாசமான உயிரினங்கள் இருக்கும். இதில் பல உயிரினங்கள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் உயிரினங்கள். உதாரணமாகக், கங்காருவை சொல்லலாம். இப்படிக் கட்டுக் கடங்காத காட்டுத் தீயால் அங்கு உயிர் வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் எங்கேயுமே தப்பித்து ஓட முடியாமல் உடல் கருகி இருந்து விட்டன. இந்தக் காட்டுத் தீயால் மட்டுமே, கிட்டத் தட்ட ஐம்பது கோடிக்கும் அதிகமான வன விலங்குகள், பறவைகள் இறந்து போய் இருக்கும் என்று சொல்கிறார்கள். குறிப்பாகக் கங்காரு, கிரேட்டர் க்ளைடர், ஈமு, கோலா போன்ற உயிரினங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இப்படி இந்தக் காட்டுத் தீயில் சிக்கி, உடல் கருகி இறந்து போன உயிரினங்களின் புகைப்படங்கள், எல்லோருடைய மனதையும் உருக்கும் வகையில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஒரு கங்காருக் குட்டி தப்பிக்க, ஓடும்போது அங்கு இருந்த கம்பி வேலியில் மாட்டி, அப்படியே உடல் கருகி இறந்து போய் இருக்கிறது. சமீப காலங்களில் ஆஸ்திரேலியா முழுவதுமே கிட்டத் தட்ட, ஆயிரம் வகையான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருந்தது. ஆனால், இந்தக் காட்டுத் தீயால் இந்த விலங்குகள் அனைத்தும், ஒட்டு மொத்தமாக அழிந்து போய் விடும் அபாயமும் இருக்கிறது என்று சொல்கிறார்கள் வனவிலங்கு ஆர்வலர்கள். அப்படியே, அந்தக் காட்டுத் தீயில் வனவிலங்குகள் உயிர் பிழைத்தாலுமே, பின் வரும் காலங்களில் அதற்குப் போதுமான அளவு உணவு கிடைக்காமல், இறந்து போய் விடும் என்று வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் காட்டுத் தீயால் ஆஸ்திரேலியாவில் வாழும், பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மக்களும் நிச்சயமாகப் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். பொதுவாக, ஆஸ்திரேலிய பழங்குடியினர்கள், வடக்கு ஆஸ்திரேலிய பகுதியில் தான் அதிகமாக வாழ்கிறார்கள். அங்கேயும் இந்தக் காட்டுத் தீ, அதிக அளவு பரவிக் கொண்டே இருப்பதால், அவர்களும் நிச்சயமாகப் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்தச் செய்தியிலும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீயை, அணைக்க நிச்சயமாக மனிதர்களால் முடியாது. இயற்கை அன்னை மனது வைத்தால் மட்டுமே, இந்தக் காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். மனிதர்களுக்காக இல்லா விட்டாலும், அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்காகவாவது, இந்தக் காட்டுத் தீயைச் சீக்கிரம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று, அந்த இயற்கை அன்னையை நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோம்.
ஒட்டு மொத்தத்தில், இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு நாடுகளும், பருவநிலை மாற்றத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, மனிதனின் நடவடிக்கையால், இந்தப் பூமியில் உள்ள பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் அழிந்து போய், இந்த உலகமே ஆறாவது பேரழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம். இந்த நிலையில் இந்தக் காட்டுத் தீயால், பல்வேறு வகையான உயிரினங்கள் கொத்துக் கொத்தாக இறந்து போவது, நிச்சயமாக இந்தப் பூமிக்கு நல்லது கிடையாது என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளரகள். இது போன்ற இயற்கைப் பேரிடர்கள், மற்ற நாடுகளில் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த உலக நாடுகள் எல்லாமே ஒன்றாகச் சேர்ந்து, இந்தப் பருவநிலை மாற்றத்திற்கு தற்காலிகத் தீர்வு காண முயற்சி செய்யாமல், நிரந்தர தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். கிரேட்டாத் அன்வர் போன்ற ஒரு சின்னப் பெண் கூட, இந்தப் பருவநிலை மாற்றத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். எனவே, நாம் ஒவ்வொருவருமே இந்தப் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து, இந்தப் பூமியை பாதுகாக்க, நம்மால் முடித்தளவு மரங்களை நடுவோம், மழை நீரைச் சேமிப்போம். இயற்கை பாதுகாப்போம். இந்தப் பூமியைப் பாதுகாப்போம். நன்றி, வணக்கம்.
0 Comments