இன்று நாம் இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட முதல் மாவீரனான பூலித் தேவனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தவர்களை, அந்தச் சுதந்திரத்திற்காகவே சுற்றித் திரிய வைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். கடலையும் கடந்து சென்று வென்ற தமிழனை, கடல் தாண்டி வந்தவர்கள் நம்மை அடிமையாக்கி, அவர்களின் அதிகாரப் பசிக்கு இறையாக்கி, நம் அடையாளங்களை மண்ணோடு மண்ணாக்கி, கிட்டத் தட்ட 350 ஆண்டுகளாக நம்மை அடக்கி ஆண்டார்கள் ஆங்கிலேயர்கள்.
நம் இடத்திற்கு வந்து நம்மை ஆள்வதா? நம் எதிர்ப்பே, அவர்களுக்கு எமன் என்று, இந்தியாவில் முதல் போராட்டக் குரல் ஒலித்தது நம் தென்னிந்தியாவில் தான். அன்றும், இன்றும், வட இந்திய தலைவர்கள் தான் எளிதில் வான் புகழ் அடைகிறார்கள். இந்தியா முழுவதும் அறிந்து போற்றும் பெருமை அவர்களுக்கு எளிதாகக் கிடைத்து விடுகிறது. ஏன், உலகம் அறியும் வாய்ப்பும் அவர்களுக்கு எளிதாகி விடுகிறது. ஆனால் தமிழ்நாட்டு அரசர்களும், தலைவர்களும் அவர்களுக்கு இணையானவர்கள் அல்ல, அவர்களுக்கு மேலாக அறிவும், ஆற்றலும், பெற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்கான அங்கீகாரமும், அடையாளமும், கிடைப்பது என்பது எப்போதுமே ஒரு போராட்டமாகவே இருக்கிறது.
இதற்குக் காரணம் உலக தலைவர்களைக் காட்டிலும், சிறந்த தலைவர்களும், சிறந்த அறிவாளிகளும் நம் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை முதலில் நம் தமிழர்களேத் தெரிந்து கொள்வதில்லை. அதனால் தான் வட நாடு புகழ் மிக்க தலைவர்கள் கொண்ட நாடாகப் பெருமையுடன் நிற்கிறது. தமிழ்நாடு திக்கற்று திகைக்க நேர்கிறது. இந்தப் புறக்கணிப்பு என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து தான் வருகிறது.
இவர்கள் எவ்வளவு புறக்கணித்தாலும், எவ்வளவு பொய்க் கதைகள் சொன்னாலும், வரலாற்றில் இருக்கும் சம்பவங்கள் அதற்குச் சாட்சியாக இருக்காது. சிப்பாய் கலகம் என்ற சிந்தனையை இல்லாத நாளில், அறப் போர் என்ற சொல்லே பிறவாத காலத்தில், பாரத நாட்டின் சொத்தை அள்ள, சுதந்திரத்தை, சுய மரியாதையைச் சூறையாட நினைத்து, சூழ்ச்சி வலையம் விரித்த வஞ்சகர்களை எதிர்த்து முதல் குரல் ஒலித்தது நம் தென்னிந்தியாவில் அதுவும் நம் வீரம் விளைந்த தமிழ்நாட்டில் தான்.
இந்திய சுதந்திரப் போரின் முதல் முழக்கத்தை ஒருவன் எழுப்பினான். அவனின் குரல் கோட்டைகளிலும், கொத்தனங்களிலும், மலைகளிலும், காடுகளிலும், பலமாக எதிரொலித்தது. இவன் ஆரம்பித்து வைத்த, இவன் இறந்த பின்னும், மானம் படைத்த இவன் வழி வந்தவர்கள் வழியாக, இவன் மரபினர்களின் வழியாக, வீரத் தமிழர்களின் உள்ளங்களில், இயற்கையாகவே சுதந்திரப் போரின் நெருப்பை, எரிய விட்டுச் சென்றது. இந்திய விடுதலை வரலாற்றில் முதல் முறையாக வெள்ளையனே வெளியேறு என்று 1751 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கமிட்டவன்.
இதனால், முதல் இந்திய விடுதலைப் போர் என்று கருதப்படும் சிப்பாய் கழகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்பட்டவன். தமிழ்நாட்டில் திருநெல்வேலி சீமையில் உள்ள நெற்கட்டாஞ் செவல் பகுதியை ஆண்ட இவன், ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு எதிராகத், தன் வீர வாலை உயர்த்திய முதல் தமிழன் மாவீரன் பூலித்தேவன். நெற்கட்டாஞ் செவலுக்கு பெருமை என்ன, நெருப்பாற்றைக் கடந்த பூலித் தேவனாலே என்ற நாட்டுப் புறப் பாடலை, நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இன்னமும் தென் பாண்டி நாட்டுப் பகுதிகளில் பூலித் தேவரின் வீரமும், ஆற்றலும், ஆளுமையும் பேசப் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
வாருங்கள் பூலித் தேவரின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் போர்க் குணத்தையும் பற்றிப் பார்ப்போம். பூலித் தேவரின் மூதாதையர்கள் 12 ஆம் நூற்றாண்டில் ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து வந்து, சங்கரன் கோவில் பகுதிகளில் உள்ள ஆவுடையாபுரம் என்ற ஊரில் கோட்டை ஒன்றைக் கட்டி ஆண்டு வந்தனர். குறுநில மன்னர்களுக்குரிய அந்தஸ்து அவர்களுக்கு இருந்தது. அந்தப் பரம்பரையில் பத்தாவது வாரிசான பூலித் தேவர். தனது ஆட்சி தலைமையகத்தை, ஆவுடையாபுரத்திலிருந்து நெற்கட்டாஞ் செவலுக்கு மாற்றினார். அங்கு அவர் ஒரு பெரிய கோட்டை ஒன்றையும் கட்டி இருந்தார்.
1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பிறந்த பூலித் தேவருக்கு, 1726 ஆம் ஆண்டு மன்னர் பட்டம் சூட்டப் பட்டது. சிறு வயதிலேயே வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும்போது அவருக்கு முறைப் படியான கல்வி அளிக்கப்பட்டது. பூலித் தேவருக்கு 12 வயதாக இருக்கும்பொழுது அவருக்குப் போர் பயிற்சி தொடங்கப் பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம், மல்யுத்தம், வாள்விச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவன் எரிதல், வல்லையம் எறிதல், சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற அனைத்து வகையான வீர விளையாட்டுகளிலும், அவருக்குப் பயிற்சி அளிக்கப் பட்டு, இவை அனைத்திலும் அவர் சிறந்தவராக விளங்கினார்.
அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் புறப் பாடலில் அவரின் உடல் வாகு பற்றிக் கூறப் பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் 6 அடி உயரம் உடையவர். ஒளி பொருந்திய முகமும், திண்மையான தோள்களையும் கொண்டவர். பவளம் போன்ற உதடும், மார்பும் இருந்ததாக, அப்பாடல் கூறுகின்றது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித் தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் இவருக்கு மிகுந்த விருப்பம் இருந்தது. இதனால் பூலித்தேவரை மக்கள் அனைவரும் புலித்தேவர் என்று அழைத்து வந்தனர்.
ஒரு அரசனை மக்களுக்குப் பிடிக்க வேண்டும் என்றால், முதலில் அந்த அரசன் ஒரு வீரனாக இருக்க வேண்டும். பேருக்கு மட்டும் அரசனாக இருந்து விட்டுப், போர் என்று வந்தால் ஓடி விடுவதும், மக்கள் வரிப் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு ஆள்பவனும் அரசன் அல்ல. அவன் வீரத்திற்கான விதையாக இருக்க வேண்டும். அவன் பிற வீரர்களுக்கு முன்னுதாரனமாக அவன் இருக்க வேண்டும். அப்படி இருந்தவன் தான் பூலித்தேவன். இவருடைய புகழ் தென் தமிழ்நாடு முழுவதும் பரவுவதற்கும், இவருடைய வீரத்தை, நாட்டு மக்கள் அறியவும் ஒரு போர் காரணமாக இருந்தது. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க, அந்நாட்டின் நாட்டில் உள்ள ஆநிரைகளை கவர்ந்து கொண்டு வந்து விடுவதும் முதல் படி. அந்தக் காளைகளை எதிரி ஒருவன் கவரும்போது, அவனோடு போரிட்டு மீண்டும் அந்தக் காளைகளை, அந்த ஆநிரைகளை, தன் நாட்டிற்கு அழைத்து வருபவனே வீரன் ஆவான். அப்படித் தான் சிவகிரிப் பாலையக்காராரான வரகுண பாண்டியன் என்ற மன்னனுடன் சண்டை இட்டுத் தனது ஆநிரைகளை மீட்டு வந்தார் பூலித் தேவர்.
அவரது புகழ் தென் தமிழகம் முழுவதும் பரவுவதற்கு, இதுவே முதல் காரணமாக அமைந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் போரிலே வெற்றி பெற்றவன் பூலித்தேவன். வீரம் நிறைந்த அரசன் யார் என்று கேட்டால் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொல்வார்கள். அதைச் சொல்பவர்கள் மேலும் எந்தத் தவறும் இல்லை. வீரபாண்டிய கட்டபொம்மனும் வீரம் பொருந்தியவன் தான். ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறப்பதற்கு முன்பே, பாஞ்சாலங்குறிச்சியை அவரது பாட்டனார் ஆண்டு வந்தார். அவரும் எட்டய புரத்து பாளையக்காரரும், ஆங்கிலேயர்களுக்குப் பணிந்து கப்பம் கட்டினார்கள். ஆனால் கப்பம் கேட்டு வந்தவர்களிடம் கப்பம் என்ற பெயரில் சல்லிக் காசு கூடத் தர முடியாது என்றும், கப்பம் கட்ட கட்டாயப் படுத்தியபோது தன்னுடைய நிலப்பகுதியில் வரி வசூலுக்கும் உரிமை எந்த ஒரு வெள்ளைக்காரனுக்கும் கிடையாது என்று வீரம் முழக்கமிட்டவர் பூலித் தேவர்.
இதன் காரணமாக நெற்கட்டாஞ் செவல் கோட்டை ஆங்கிலேயர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. பூலித் தேவரின் விவேக மிக்க வீரத்தின் முன், ஆங்கிலேயர் தளபதியின் வீரம் எடுபட வில்லை. அந்தப் போரில் பூலித் தேவரின் தரப்பு வெற்றி பெற்றது. இதன் காரணமாகக் கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலேயப் படையுடன் போர் செய்து, வெற்றி பெற்ற தமிழன் என்ற பெருமை பூலித்தேவர் வசமானது. முதல் தமிழர் மட்டுமல்ல. இந்திய விடுதலைப் போரின் முதல் வெற்றியின் இதுவே.
பூலித்தேவர் ஆட்சி செய்த காலம் பாண்டியர் ஆட்சியின் முடிவும், நாயக்கர் கால ஆட்சியின் ஆரம்பமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்து மீறல்கள், அதற்குள் ஆங்கிலேயர் வருகை என்று, பல தோற்றம் மறைவுகளை சந்தித்துக் கொண்டிருந்த காலம் அது. இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால், சிறிய அளவில் இருக்கும் பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்து பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி, அரசியலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றித் தீவிரமாக விவாதித்து, பாளையக்காரர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக, உள்நாட்டு அரசர்களின் கூட்டணியினையும், அவர் அமைத்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேச அரசர்களின் கூட்டத்தை அமைத்தவர் என்ற பெருமையும் பூலித்தவருக்கு சொந்தமானது.
அந்தக் கூட்டணியில் கொல்லங் கொண்டான், சேத்தூர், வடகரை, ஊத்து மலை, தலைவன் கோட்டை ஆகிய பாளையங்களும், திருவனந்தபுரம் அரசும் இணைந்து கொண்டன. ஒரு ஆண்டு அல்ல, இரண்டு ஆண்டு அல்ல, கிட்டத் தட்ட 17 ஆண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பூலித் தேவரின் படைப் பல போர்களை நடத்தியது. அவை அனைத்திலும் தோல்வியே கண்டு ஆங்கிலேயப் படை, பின் அவர்களின் இனத்திற்கே உண்டான, சூழ்ச்சி வலையை விரித்தது. பூலித்தேவரின் சொந்த தமிழ் மக்களைக் கொண்டே அவரைக் கருவறுக்க வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் அதற்காக ஒருவனை தேர்வு செய்தது. அவன் பெயர் முகமது யூசுப் கான். அவனுக்கு மற்றொரு பெயரும் இருந்தது அது தான் மருத நாயகம்.
1751 ஆம் ஆண்டிலிருந்து 1767 ஆம் ஆண்டுவரை கிட்டத் தட்ட 17 ஆண்டுகள் பூலித் தேவர் தொடர்ச்சியாக ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தினார். அந்த அனைத்து போர்களிலும் பூலித் தேவரே வெற்றி பெற்றார். ஒரு முறை கூட ஆங்கிலேயர்களால் பூலித் தேவரை வெற்றி பெற முடியவில்லை. இதற்கு காரணம் பூலித்தேவர் தன் கோட்டையை கருப்பட்டி போன்ற பல மூலிகை விஷயங்களை வைத்துக் கோட்டையைக் கட்டினார். அதனால் தான் பூலித் தேவரின் கோட்டை மிகவும் வலிமையாக இருந்தது. அதனால் தான் ஆங்கிலேயர்கள் எவ்வளவு நவீன ஆயுதங்கள் வைத்திருந்தாலும், பூலித் தேவரின் கோட்டையை அவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.
இதன் பின்னர், இறுதியாக ஆங்கிலேயருடன் நடந்த ஒரு போரில் பூலித் தேவரால் வெற்றி பெற முடிய வில்லை என்பதை உணர்ந்த, பூலித் தேவர் ஆங்கிலேயரிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தப்பி சென்று விட்டு, சில ஆண்டுகள் ஒரு கிராமத்தில் தலை மறைவாக வாழ்ந்தார். அதன் பிறகு பூலித் தேவர் எட்டப்பன் ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயர்கள் பூலித் தேவரைக் கைது செய்தனர். ஆங்கிலேயர்கள் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கூட்டிச் செல்லும் வழியில், தான் சங்கரன் கோவிலில் வழி பட விரும்புவதாகவும், ஆங்கிலேயர்கள் அவரை வழி பட கோவிலுக்குள் அனுமதித்ததாகவும் அந்தச் சங்கரன் கோவிலுக்குள் சென்ற பூலித் தேவரை அதன் பின் யாரும் பார்க்க வில்லை என்று ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், வெள்ளையனுக்கு எதிராகக் கப்பம் கட்ட முடியாது என்று வீர முழக்கமிட்டு தன் வாழ்நாளில் இறுதி வரை வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட மாவீரர் பூலித் தேவரைத் தமிழர்களாகிய நாம் அனைவரும் போற்றி வணங்குவோம். இவரைப் போன்ற ஒரு வீரன் இதற்கு முன், இந்தப் பூமியில் பிறந்ததும் இல்லை, இனிமேல் பிறக்கப் போவதுமில்லை.
Effect Download
0 Comments