குலோத்துங்க சோழன் | குலோத்துங்க சோழன் வாழ்க்கை வரலாறு

அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் சோழ சாளுக்கிய வம்சத்தின் வழியில் வந்த குலோத்துங்க சோழனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

எடும் எடும் எடும் என எடுத்ததோர். இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே. விடு விடு விடு பரி பரி குழாம்.விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே. சோழர்கள் தமிழர்களா? இல்லை தெலுங்கர்களா? இப்படியொரு சர்ச்சையைக் கிளப்பியது சோழர்கள் வரலாற்றைப் பற்றிச் சுத்தமாகத் தெரியாதவர்கள் தான். ஆனால், சோழர்களில் சில பேர் தெலுங்கர்களும் இருந்தார்கள். நீங்கள் என்ன  குழப்புகிறீர்களே என்று கேட்கிறீர்களா.


தமிழரும், தெலுங்கருமான முதல் சோழ மன்னர். கலிங்கத்துப் பரணி பாடிய குலோத்துங்க சோழன். இன்று நாம் பார்க்கப் போகும் சோழ மன்னர் கலிங்கத்துப் பரணி பாடிய குலோத்துங்க சோழன். கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் கிழக்குச் சாளுக்கிய இராஜ்ஜியத்தில் தோன்றிய குலோத்துங்கனால், சோழ இராஜ்ஜியமும், கிழக்குச் சாளுக்கிய இராஜ்ஜியமும் ஒன்றாக இணைந்தன. அவருடைய தாயும், பாட்டியும் சோழ வம்சத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவருடைய உடம்பில் சோழ இரத்தமும் ஓடியது. 


தனது புகழ் வாய்ந்த சோழ நாட்டு முன்னோர்கள் போலவே வீரம் வழிய கிட்டத் தட்ட 52 ஆண்டுகள் ஆட்சி செய்தார் குலோத்துங்க சோழன். சோழர்களுக்கும் இன்றைய ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த கிழக்குச் சாளுக்கியர்களுக்கும் இடையே  நடந்த முதல் திருமணம் - இராஜராஜ சோழனின் மகள் குந்தவை மற்றும் விமலாதித்தனின் திருமணம். பின்னாளில் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவிக்கும், கிழக்குச் சாளுக்கிய மன்னரான இராஜராஜ  நரேந்திரனுக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே பிறந்தவரே இராஜேந்திர சாளுக்கியன் என்னும் இயற்பெயர் கொண்ட  குலோத்துங்க சோழன். 


குலோத்துங்க சோழன் அரியணை ஏறியது பல திருப்பங்களைக் கொண்ட ஒரு சுவாரசியமான நிகழ்வு. கிழக்குச் சாளுக்கிய நாட்டில் இராஜராஜ நரேந்திரன் இறந்த பின்னர், அவர் மகன் குலோத்துங்கனே அரியணைக்கு உரிமை கொண்டவர். ஆனால், அதற்குத் தடையாகக் குலோத்துங்கனின் சித்தப்பா விஜயாதித்தன், அரியணையின் மீது உரிமை கொண்டாடினார். அதே சமயம் சோழ நாட்டில் இராஜேந்திர சோழனின் காலத்திற்குப் பின், அவருடைய மூன்று மகன்களும் ஆட்சி செய்தப் பின்னர், ஆதிராஜேந்திரன் ஆட்சி செய்யத் தொடங்கினார். மத சார்பான வேறுபாடுகள் கொண்ட அந்தக் காலக் கட்டத்தில், வைணவர்களின் எழுச்சியின்போது புதிதாக அரியணை ஏறிய ஆதி ராஜேந்திரன் இறந்தார். 


மன்னர் இறப்புக்குப் பின், ஆட்சி அமைக்க எவருமின்றி குழப்பத்தில், மூழ்கியது சோழ நாடு. அப்போது, கிழக்குச் சாளுக்கிய இளவரசனான குலோத்துங்கன், சோழ நாட்டை மீட்டெடுக்க, தெற்கு நோக்கிக் கிளம்பினான். சோழ நாட்டின் அரியணையில் ஏறிச், சோழ வரலாற்றின் முதல் சோழ சாளுக்கிய மன்னர் ஆனார். ஆந்திராவைச் சேர்ந்த இராஜேந்திர சாளுக்கியர் தமிழ் மன்னரான குலோத்துங்கச் சோழன் ஆகிறார். இராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரன் என்றால் சும்மாவா? நெருப்பு மாதிரி இருந்தார். 


ஆனால், அதே நேரத்தில் அந்த நெருப்பை எப்படிக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிந்திருந்தார் குலோத்துங்க சோழன். மேற்கு சாளுக்கியர்களின் முக்கிய எதிரிகள் சோழர்களும், கிழக்குச் சாளுக்கியர்களுமே. குலோத்துங்க சோழனால் இந்த இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து போரிட,  மேலும் வலிமை அதிகரித்த எதிரியைக் கண்டு, மேற்குச் சாளுக்கியர்கள் பயமுற்றனர். எதிர் காலத்தில் வரக்கூடிய ஆபத்தை எண்ணி, மேற்குச் சாளுக்கிய மன்னர் ஆறாம் விக்ரமாதித்தன், முன் எச்சரிக்கையாகச் சோழ நாட்டின் மீது படையெடுத்தார். மிகக் கடுமையான போருக்குப் பின்னர், விக்ரமாதித்தனை வீழ்த்தித் துரத்தி அடித்ததோடு நில்லாமல், விக்கிரமாதித்தன் நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றினார் குலோத்துங்கன். 


குலோத்துங்கச் சோழனின் காலத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், இராஜ ராஜ சோழன் இலங்கையின் வட பகுதியும், அதற்குப் பின்னர், அவரது மகன் இராஜேந்திர சோழன் ஒட்டு மொத்த இலங்கை முழுவதையும் கைப்பற்றி இருந்தனர். ஆனால்,  பிற்காலத்தில் இலங்கை படிப் படியாக, சிங்களத்து மன்னர் விஜய பாகுவுக்கு அடியில், வந்தது. அவர் இலங்கைத் தீவு முழுவதற்கும் தானே மன்னர் என்று கூறி முடி சூட்டிக் கொண்ட போதிலும், குலோத்துங்கனுக்கு இலங்கையை மீண்டும் படையெடுத்துச் சென்று, அதைக் கைப்பற்றும் எண்ணம் இல்லை. சோழ நாட்டைப் பராமரிப்பதிலேயே அவரது முழு கவனத்தையும் செலுத்தினார். பாண்டியர்கள் சோழர்களின் ஆட்சியின் கீழ் இருந்தாலும், அவர்கள் சோழர்களின் ஆதிக்கத்தை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் சோழர்களுக்குத் தீராத தொல்லையாகவே இருந்தனர். 


பின்னாளில் பாண்டியர்கள் முற்றிலுமாகச் சுதந்திரம் பெற வேண்டும் என்று எண்ணியபோது, குலோத்துங்கன் அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினான். யானைப் படையும், குதிரைப் படையும் காலப் படையும் கொண்ட ஒரு பெரிய தொரு படையை அனுப்பி, தனக்கு எதிராகப் புரட்சி செய்த ஐந்து பாண்டியர்களையும் தோற்கடித்தார். அந்த மன்னர்கள் ஓடி ஒளிந்த காடுகளை அழித்து, பொதிகை மலை, கன்னியாகுமரி மற்றும் முத்துக்களால் செழித்த கடற்கரைகளையும் கைப்பற்றி, பாண்டிய நாடு முழுவதிலும் வெற்றித் தூண்கள் எழுப்பினார். பின்னர், பாண்டியர்களைப் போலவே சேரர்களும் சோழர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் புரட்சியில் ஈடுபட்டனர். 


குலோத்துங்க சோழன் தனது படைத் தளபதி நரலோக வீர காளிங்கராயனை அனுப்பி போரிடச் செய்து, அவர்களை வீழ்த்திக் கொல்லம் மற்றும் காந்தளூர் சாலை மற்றும் விழிஞ்சத்தைக் கைப்பற்றி மீண்டும், சேர நாட்டைச், சோழ நாட்டின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தார் குலோத்துங்க சோழன். குலோத்துங்க சோழனின் தனித்துவம் என்னவென்றால் சேரப், பாண்டிய நாடுகளை வெற்றிகரமாகக் கைப்பற்றி இருந்தாலும், கப்பம் மட்டுமே வசூலித்து வந்தார். ஒரு போதும் அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வில்லை. 


கரிகாலச் சோழனின் வெண்ணிப் போர், இராஜேந்திர சோழனின் கடாரப் போர் மாதிரி, தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போர் என்றால் குலோத்துங்கனின் கலிங்கத்துப் போர். அதில் அப்படி என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள்? குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில் கலிங்க நாடு என்று அழைக்கப்பட்ட இன்றைய ஒரிசா, கிழக்குக் கங்கை இராஜ்யத்தின் கீழ் இருந்தது. இரண்டு முறை கலிங்கத்தின் மீது படையெடுத்துச் சென்று, இரண்டு முறையும் போரில் வென்ற, குலோத்துங்கன் இரண்டாவது முறை கலிங்கத்தின் மீது படையெடுத்துச் செல்லும்போது, தனது படைத் தளபதி கருணாகர தொண்டைமான் மூலம், கலிங்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்கனைக் கடும் போரில் வீழ்த்தினார். 


பரணி என்பது போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி பெறும் வீரர்களின் மேல் பாடப் படும் ஒரு தமிழ் இலக்கிய வகை. குலோத்துங்க சோழனின் அவைப் புலவராகத் திகழ்ந்த, ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி. கலிங்கத்துப் போரின் மகத்துவத்தை வீரம் பொங்கும் அளவிற்கு விவரிக்கிறது. எடும் எடும் எடும் என எடுத்ததோர். இகல் ஒலி கடல் ஒளி இகக்கவே. விடு விடு பரி கரி குழாம். விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே. குலோத்துங்க சோழன், சோழ மன்னர் ஆவதற்கு முன்பே, சோழர்களின் செல்வாக்கை நிலை நாட்டத் தனது மாமா, வீர ராஜேந்திரனின் சார்பில், இன்றைய மலேசியாவான கடாரம் நோக்கிப் படையெடுத்திருந்தார். 


இராஜேந்திர சோழனின் காலத்தில் உருவாக்கப் பட்ட கடல் வழி வணிகத்தைக் குலோத்துங்க சோழன் நல்ல முறையில் தொடர்ந்து வந்தார். சீனா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஆன வணிகத்தில், சோழ நாடு செழித்து இருந்தது. முற்காலத்தில் ஒரு நாட்டின் நிதி நிலைமை மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. அவைகள் நில வரி, சுங்க வரி மற்றும் போர் வெற்றி ஆகியவைகள் ஆகும். சோழ நாட்டில் குலோத்துங்க சோழன் சுங்க வரி முறையை ஒழித்ததால்,  சுங்கம் தவிர்த்த சோழன் என்று போற்றப்பட்டார். அவருக்கு மதுராந்தகி, தியாக வல்லி, ஏழிசை வல்லபி முதலிய பல மனைவிகள் இருந்தனர். 


இராஜ ராஜ சோட கங்கன், வீரச் சோழன் மற்றும் விக்கிரமச் சோழன் முதலிய மூன்று மகன்கள் அவருக்கு இருந்தனர். சுத்த மல்லி மற்றும் அம்மங்கை ஆழ்வார் என்ற இரண்டு மகள்களும் இருந்தனர். வீரமும் இருக்க வேண்டும், கட்டுப் பாடும் இருக்க வேண்டும். அப்படி வாழ்ந்து காட்டியவர் தான் குலோத்துங்க சோழன். அவர் அவர்களுடைய முன்னோர்கள் மாதிரி எப்பொழுதுமே போருக்குச் செல்ல வேண்டும், நாட்டைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்காமல், தன்னுடைய சோழ நாட்டு மக்களை மிகவும் சிறப்பாக, நல்ல முறையில் பார்த்துக் கொண்டவர் மாமன்னர் குலோத்துங்க சோழன். 


சோழ நாட்டில் வலிமையான, அமைதியான, நீண்ட கால ஆட்சியைக் கொண்ட குலோத்துங்க சோழன் நம் நினைவில் என்றென்றும் வாழ்வார். சோழ தேசத்துடன் பல தேசங்கள் பகைமையுடன் இருந்தாலும், ஒரு சில தேசங்கள் நட்புறவுடனே இருந்தன. அதில் மிக முக்கியமான ஒரு தேசம் கீழைச் சாளுக்கிய தேசம். ஆம், இராஜராஜ சோழன் காலத்தில் தொடங்கி வீர ராஜேந்திரன் வரை பெண் கொடுத்துப், பெண் எடுக்கும்  உறவு முறை சோழ தேசதிற்கும், கீழைச் சாளுக்கிய தேசத்திற்கும் பல ஆண்டுகளாக இருந்து வந்தது.  முதலாம் குலோத்துங்க சோழன் அரியணை ஏறிய ஆண்டு கி.பி. 1070 ஆம் ஆண்டு. இவர் அரியணை ஏறிக் கிட்டத் தட்ட நான்கு தலைமுறைக்கும் மேல் 52 ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். ஆம், அப்போது தெரிந்து கொள்ளுங்கள் இவரின் ஆட்சித் திறனும், செயல் திறனும் எவ்வாறு இருந்திருக்கும் என்று. 


கி.பி. 1070 முதல் 1022 வரை இவரின் ஆட்சிக் காலம் இருந்தது. கிட்டத் தட்ட அரை நூற்றாண்டுக் காலம் சோழ சாம்ராஜ்ஜியத்தின் மன்னர் இவர் தான். இந்த நிலைக்கு முதலாம் குலோத்துங்கச் சோழன் அவ்வளவு எளிதாக வரவில்லை. முதலில் மக்களின் மனதில் இடத்தைப் பிடிக்க வேண்டும். அதன் பிறகு சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் வெற்றி பெற்று வீழ்த்திக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் குறியாக இருந்தார் முதலாம் குலோத்துங்கச் சோழன். வரிகளைக் குறைத்து, நிறைவான வருமானத்தைத் தேடித் தந்து, சோழ நாட்டின் வணிகர்களைச் செல்வச் செழிப்பாக நடத்தினார் முதலாம் குலோத்துங்க சோழன். அன்றைய காலக் கட்டத்தில் சோழ நாட்டை அளக்கவும் உத்தரவிட்டார். அதை இரண்டு ஆண்டுகளில் செய்தும் முடித்தார் முதலாம் குலோத்துங்க சோழன். 


சோழ வம்சத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் எந்த ஒரு மன்னரும் ஆட்சி செய்ததில்லை. 52 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த முதல் மன்னர் என்ற பெருமையை இவர் பெற்றார். அதே நேரம் இவர் சோழ சாளுக்கிய மன்னராக இருந்தாலும், சோழ வம்சத்தில் எந்த ஒரு குறையும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக ஆட்சி செய்தார். சோழ  வம்சத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் மிகச் சிறந்த மன்னர் என்பதில் எந்த ஒரு சந்தேகம் இல்லை. சோழ வரலாற்றில் முதலாம் குலோத்துங்க சோழனுக்கு என்று எப்பொழுதும் ஒரு தனி இடம் இருக்கும். முதலாம் குலோத்துங்க சோழனின் புகழ் என்றும் ஓங்குக.


Full Project Download

Beatmark Download

Effect Download


Post a Comment

0 Comments