அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் இலங்கையை ஆண்டத் தமிழ் மன்னரான இராவணன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
பொதுவாகவே, இதிகாசங்கள் அதாவது, இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளை உண்மை என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள், இல்லை இதெல்லாம் பொய் என்று நம்பாதவர்களும் இருக்கிறார்கள். இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இப்படித் தான் இருக்கிறது. இந்தப் பதிவில் இராமாயணத்தில் வில்லனாகச் சித்தரிக்கப்படும் இராவணன் அவரைப் பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
இராவணன் இந்தப் பெயரைக் கேட்டதும், நமக்கு மனதில் என்ன தோன்றும் என்றால், பத்து தலையைக் கொண்டவர், அரக்கர், சீதை கடத்தி விட்டுச் சென்றதால் இராமர் இவர் மேலே கோபப்பட்டு இவரைக் கொன்று, இலங்கையை அழித்தார். இவரைப் பற்றி இப்படித் தான் நமக்குத் தெரியும். இப்படி இராமரை கடவுளாகவும், இராவணனை அரக்கனாகவும் தான் நமக்குத் தெரியும். ஏன், அப்படி என்றால் நமக்கு அப்படித் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சரி, எதை வைத்து நாம் இராவணனை வில்லன் என்று சொல்கிறோம்.
அவர் பக்கம் நியாயமே கிடையாதா? உண்மையிலேயே இராவணன் ஒரு அரக்கன் தானா? அவருக்கு உண்மையிலேயே பத்து தலைகள் இருந்ததா? இராவணனின் வீழ்ச்சிக்குப் பிறகு இராமனின் ஆட்சி எப்படி இருந்தது? ஆரியர்களுக்கும் தமிழர்களுக்குமான இந்தப் போர் தான் இராமாயணமா? இது போன்ற கேள்விகளுக்கு விடையாகத் தான் இந்தப் பதிவு இருக்கப் போகிறது. இராவணன் என்பது இராமாயணத்தில் வரும் வால்மீகி எழுதிய ஒரு கதாபாத்திரம். அதில் இராவணன் இலங்கை ஆட்சி செய்து வந்ததாகக் குறிப்பிட்டு இருப்பார்கள். ஆனால் இராவணன் உண்மையிலேயே இலங்கையை மட்டும் ஆட்சி செய்யாமல், இலங்கைய தலைநகராகக் கொண்டு, இந்திய மொத்த நிலப்பரப்பையும் ஆண்டு வந்த ஒரு தமிழ் மன்னர் தான் இராவணன்.
அப்படி என்றால், இராமர் யார் என்று கேட்கிறீர்களா? வடக்கிலிருந்து இந்தியாவுக்கு வந்து, ஒரு சிறிய பகுதியை ஆட்சி செய்த ஒரு ஆரிய குறு நில மன்னர் தான் இராமன். இந்த இராமாயணம் என்பது தமிழர்களுக்கும், ஆரியர்களுக்கும் இடையே நடந்த ஒரு போர் தான். இந்தப் பூமியில் மனித இனம் தோன்றி, பல குழுக்களாகப், பல இடங்களுக்குப், பரவ ஆரம்பித்ததில் இருந்தே, அவர்கள் எல்லோருக்கும் ஒரு பொதுவான விஷயம் இருந்தது. அது என்னவென்றால், ஓரிடத்தில் ஒரு குழு நன்றாகச் செழிப்பாக, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதைப் பார்த்துப் பொறாமைப் படும் மற்றொரு குழுவினர்கள், அவர்களை விரட்டி அடித்து விட்டு, அவர்களே அங்கேயே தங்கிக் கொள்வார்கள்.
அப்படி இல்லை என்றால், அங்கே உள்ள பொன், பொருள் என்று விலை மதிக்க முடியாத பொருட்களை எடுத்து விட்டுச் சென்று விடுவார்கள். இப்படி சிறு குழுவாக இந்தியாவிற்குள் வந்த ஆரியர்கள், இந்திய நிலப் பரப்பு முழுவதுமே, நாகரிகத்தோடு மிகவும் செழிப்பாக வாழ்ந்த, தமிழர்களைப் பார்த்துப் பொறாமைப் பட்டுச், சூழ்ச்சியால் தமிழர்கள் இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் ஆரியர்கள். இந்தியா, பாகிஸ்தான், ஈரான், சீனா, மங்கோலியா போன்ற நாடுகளில் அகழ்வாராய்ச்சி செய்து அங்குள்ள எலும்புகளில் கிடைத்த டி. என். ஏ. வை வைத்து, ஆராய்ச்சி செய்ததன் மூலமாக இதை உறுதியும் செய்திருக்கிறார்கள்.
இப்பொழுது வரைக்குமே இந்தியத்தையும், ஆரிய சமஸ்கிருதத்தையும், கடுமையாக எதிர்க்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான். இதே போல் இந்திய ஆரியமும் தமிழர்களின் மீது தொடர்ந்து, பல தாக்குதல்களை நடத்திக் கொண்டு தான் இருக்கிறது. சரி, இப்பொழுது இராவணனைப் பற்றிப் பார்க்கலாம். நான் முன்பே சொன்னது போல் இராவணன் இலங்கையை தலைநகராகக் கொண்டு, நம் மொத்த இந்திய நிலப் பரப்பையும் ஆண்ட ஒரு தமிழ் மன்னன். இராவணனின் ஆட்சி காலத்தில் இந்தியாவும், இலங்கையும் மிகவும் செழிப்பாக இருந்தது என்று சொல்வார்கள். இதே போல் அந்தக் காலக் கட்டத்திலே, மக்கள் மிகவும் செல்வச் செழிப்பாகவும், நாகரீகத்தோடும் வாழ்ந்தார்கள் என்பதை இராமாயணத்திலே குறிப்பிட்டு இருப்பார்கள். இராவணனின் உண்மையான பெயர் தசக்கிரீவன் என்றும் சொல்வார்கள்.
இதே போல் இராவணன் என்றால், இரு ஆவணன். அதாவது, பெயர் உரிமை உடையவன் என்றும், இராவணன் என்றால் பிறருக்கில்லா அழகன் என்றும் சொல்வார்கள். இது மட்டுமில்லாமல் இராவணனை, இராவண்ணன் அதாவது, இருளைப் போன்ற கருமையான நிறத்தை உடையவன் என்றும் சொல்வார்கள். இராவணன் கல்வியில் மிகச் சிறந்து விளங்கியவர் என்றும், ஆயுர் வேதம், வான சாஸ்திரம், ஜோதிடம், இசை, போர்க் கலைப் போன்ற பல துறைகளில் வல்லவர் என்றும் இதனாலேயே அவரைப் பத்துத் துறை எல்லோரும் அழைத்துக் கொண்டிருந்தனர். அது தான் பின்னாளில் மாறிப் போய், பத்து தலை ராவணன் என்று பெயர் வந்தது.
உண்மையிலேயே இராவணனுக்கு பத்து தலை எல்லாம் ஒன்றும் கிடையாது. இராவணனை ஒரு அரக்கனைப் போலச் சித்தரிக்க வேண்டும் என்பதற்காக ஆரியர்கள் கொடுத்த இந்த உருவம் தான் பத்து தலை. இராவணன் ஆயுர் வேதத்தைப் பற்றிக் கிட்டத் தட்ட 27 நூல்களை எழுதி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் மிகச் சிறந்த சிவ பக்தனான இராவணனின் நெற்றியில் எப்பொழுதும் திருநீரு இருந்து கொண்டே இருக்குமாம். இது மட்டுமில்லாமல் வீணை வாசிப்பதிலும் இராவணன் சிறந்தவர். அவருக்காகவே, இராவண வீணா என்ற ஒரு வீணையை அவரே உருவாக்கிச் சில சிவ தாண்டவப் பாடல்களையும் இசைத்து இருக்கிறார். இராவணன் ஒரு மிகச் சிறந்த போர் வீரர்.
முதன் முதலில், ராவணனின் படைகள் தான் தலைக் கவசம் அணிந்து போர் புரிந்து இருக்கிறார்களாம். இதே போல் பாம்பின் விஷத்தையும் போரில் ஆயுதமாகப் பயன்படுத்தியது இராவணன் தான். இராவணன் ஒரு பறக்கும் விமானத்தை வைத்திருந்தார் என்று இராமாயணத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். இந்தப் பறக்கும் விமானம் இறங்குவதற்காகவே, இலங்கையின் பல பகுதிகளில், விமான நிலையங்களும் இருந்து இருக்கிறது. அதில் ஒன்று தான் வாரியப் போல. அதாவது, வானோடும் களம் இறங்கும் பகுதி. இன்னமும் கண்டி என்ற இடத்தில் இருக்கிறது. கடந்த வாரம் இலங்கையில் உள்ள காட்டு நாயகி என்ற இடத்தில், இலங்கை விமான போக்குவரத்து துறை சார்பாக நடந்த ஒரு கருத்தரங்கில், இராவணன் தான் உலகின் முதல் விமானி. 5000 ஆண்டுகளுக்கு முன்பே,.விமானத்தைப் போல ஒன்றைச் செய்து, அதை வைத்து இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்று வந்திருக்கிறார்.
இதை நாங்கள் இன்னும் ஐந்து வருடத்திற்குள் ஆதாரப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும், ஆதாரத்துடன் நிரூபிப்போம் என்று இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துணைத் தலைவரான சசி டானா துங்கே. இதே போல் கடந்த வருடம் இலங்கை விண்ணில் செலுத்திய செயற்கைக் கோளுக்குக் கூட, இராவணன் 1 என்று தான் பெயர் வைத்து இருக்கிறார்கள். நாம் எல்லோருக்குமே இராமருக்கும், இராவணனுக்கும் ஏன் சண்டை வந்தது என்று கேட்டால், இராவணன் சீதையை கடத்திக் கொண்டு சென்று விடுவார். இதனால் தான் இராமர் அவர்மீது கோபப்பட்டுப் போர் தொடுப்பார் என்று தான் நாம் சொல்வோம். ஆனால் போருக்கான உண்மையான காரணம் அது கிடையாது.
இராவணனின் தங்கை சூர்ப்பனகையைப் பார்த்து, இராமரின் தம்பி, இலட்சுமணன் நீ மிகவும் கருப்பாக இருக்கிறாய், அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்லி, நீ எப்படி எங்கள் அருகில் வந்து பேசலாம் என்று கூறி, சூர்ப்பனகையின் மூக்கை இலட்சுமணன் அறுத்து விடுவார். சூர்ப்பனகை உடனே சென்று, இராவணனிடம் இதைப் பற்றி முறையிடுவார்கள். இதைக் கேட்டவுடனே, இராவணனுக்கு மிகவும் கோபம் வந்து விடும். நீங்களே சொல்லுங்கள் இதே போன்ற ஒரு நிகழ்வு நமது தங்கைக்கு நடந்தால் நமக்குக் கோபம் வருமா? வராதா? அதிலும் ராவணன் ஒரு மிகப் பெரிய பேரரசன். உடனே அவர் தனது புஷ்ப விமானத்தை எடுத்துச் சென்று, இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று சீதையை தூக்கி விட்டு வந்து விடுவார். அப்படி இருந்தும் சீதையின் மீது இராவணனின் சுண்டு விரல் கூடப் படாது என்று ராமாயணத்திலே குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த அளவிற்கு மிகவும் ஒழுக்கமான மன்னர் இராவணன்.
இது மட்டுமில்லாமல் சீதை இராவணனின் மகள் என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. உண்மையிலேயே இராமாயணப் போர் சீதைக்காக மட்டும் நடந்தது கிடையாது. தமிழர்கள் நிலப்பரப்பையும், செல்வச் செழிப்பையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்பது தான் ஆரியர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதற்கு அவர்கள் பயன்படுத்தியது தான், இராவணன் சீதையைக் கடத்தி விட்டார் என்ற ஒரு நிகழ்வு. இதே போல் இராவணன் வீழ்த்தப்பட்டதும், அவரைச் சுற்றி இருந்தவர்கள் செய்த சூழ்ச்சியால் தான். இராவணனின் தம்பியான விபிசனன் இராவணனின் போர்த் தந்திரங்களை இராமனிடம் சொல்லிவிடுவார். இது இராவணனுக்கு மிகப் பெரிய பாதகமாகவே அமைந்தது. உண்மையாகவே நேர்மையாகவோ, நேரடியகவோ போர் நடந்திருந்தால் கண்டிப்பாக இராமனால், இராவணனை வீழ்த்திருக்க முடியாது.
அந்த அளவிற்கு படைப் பலம் கொண்டவர் தான் இராவணன். சரி, உண்மையாகவே சீதைக்காகத் தான் அந்தப் போர் நடந்தது என்றால், போரில் வெற்றி பெற்று சீதையை மீட்டப் பிறகு, எதனால் இராமன் சீதை மேல் சந்தேகப்பட்டு அவர்களைத் தீக்குளிக்கச் சொன்னார். இது மட்டுமில்லாமல், அதற்கு அப்புறம் கூடச் சீதை கூட, ஒழுங்காக வாழாமல் நிறை மாதக் கர்ப்பினியான சீதையைக் காட்டுக்குள் அனுப்பி விடுவார். கடைசியாகச் சீதை காட்டிற்குள்ளே பல காலங்கள் வாழ்ந்து காட்டிற்குள்ளே இறந்து விடுவார்கள்.
இப்பொழுது சொல்லுங்கள் உண்மையாகவே இந்தப் போர் சீதைக்காகத் தான் நடந்ததா? இராவணனை அரக்கன், கொடூரன் என்று சொல்கின்ற இராமனின் வாரிசுகள், அதாவது இப்பொழுது இருக்கும் வட இந்தியர்கள் எல்லாம் இராம ராஜ்ஜியம் வேண்டும் என்று சொல்கிறார்கள். இராம ராஜ்ஜியம் உண்மையிலேயே எப்படி இருந்தது என்று இராமாயணத்திலே குறிப்பிட்டு இருக்கிறார்கள். மனிதர்களை ஜாதியால் பிரிக்கின்ற வரணாசிரமத்தை வைத்துத் தான், இராமர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். சாதியக் கொடுமைகளும், சாதியத் தீண்டாமைகளும் தலை விரித்து ஆடியது இந்த இராம ராஜ்ஜியத்தில் தான். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி என்பது சுத்தமாக மறுக்கப்பட்டது. இதற்கு இராமாயணத்தில் உள்ள உத்தர காண்டத்தில் ஒரு உதாரணமும் இருக்கிறது. சூத்திரன் அதாவது, தாழ்ந்த ஜாதியைைச் சேர்ந்த சம்புகன் என்ற சிறுவன், வேதங்களைப் படித்தான் என்ற ஒரே காரணத்திற்காகவும், இதைப் போல மற்ற சூத்திரர்கள் யாரும் படித்து விடக் கூடாது என்பதற்காக, சம்புகனை ஒரு மரத்தில் தலை கீழாகக் கட்டி, அவனின் தலையை வெட்டி எறிந்தார் இராமன்.
இப்பொழுது சொல்லுங்கள் இராம ராஜ்ஜியம் எப்படி இருந்தது என்று. இப்பொழுதுமே சூத்திரர்களுக்குக் கல்வி கிடைக்கக் கூடாது என்பதற்காக, நீட், நெக்ஸ்ட் போன்ற தேர்வுகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள் இந்த இராமனின் வாரிசுகள். இதே போல் இராவணன் இறந்த தினத்தை, வருடா வருடம் ஆரியர்கள் தசரா, பண்டிகையாகக் கொண்டாடுவார்கள். அப்பொழுது இராவணனின் உருவப் பொம்மையை எரித்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். அதாவது, அந்த நாள் ராமன், இராவணனை தோற்கடித்து, இராவணன் இறந்த தினம் அதே போல, சரியாகத் தசராப் பண்டிகை முடிந்து, 18 நாட்கள் கழித்து தீபாவளிப் பண்டிகை வரும். இராமன் இங்கிருந்து, அவர்கள் ஊருக்குச் சென்று, முடி சூட்டிக் கொண்ட நாள் தான் தீபாவளி. ஆனால், நம் இனத்தில் அதாவது, நம்முடைய மன்னர் இறந்ததை, நாம் எப்படிக் கொண்டாடுவோம்.
இதனால் தான் நமக்காக, வேறொரு கதையைக் கூறி, இருக்கிறார்கள் ஆரியர்கள். அதாவது, நரகாசுரன் என்ற ஒருவன் இறந்த நாள் தான் தீபாவளி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் தான் தீபாவளி என்பது ஒரு தமிழர் பண்டிகைையே கிடையாது என்று சொல்வார்கள். சரி, உண்மையிலேயே இராவணன் இவ்வளவு நல்லவராக இருந்தால், ஏன், தமிழர்கள் எல்லோரும் இராவணனைக் கடவுளாகப் பார்க்காமல், இராமனைக் கடவுளாகப் பார்க்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? இதெல்லாம் ஆரியர்களின் சூழ்ச்சி தான். அதாவது, கம்பன் என்ற தமிழனை வைத்து, தேன் சூட்டும் தமிழ் மொழியில், அவர் எழுதிய கம்ப ராமாயணம் தான் இதற்கெல்லாம் காரணம். அதில் இராமனைக் கடவுளாகவும், இராவணனை வில்லனாகவும் சித்தரித்து இருப்பார் கம்பர். தமிழர்களாகிய நாம் அனைவரும் அதை அப்படியே நம்ப ஆரம்பித்து விட்டோம்.
அதாவது நம் கையை வைத்து, நம் கண்ணையே குத்துவது. எல்லா காலத்திலும் இதே போன்ற கோடரிக் காம்புகள் இருந்து கொண்டு தான் வருகிறார்கள். இந்த இராமாயணத்தால் இராவணனின் மீது, விழுந்த பழியைத் துடைக்கும் விதமாக, இராவணன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துச் சொல்லும் விதமாக, புலவர் குழந்தை என்ற கவிஞர் இராவணக் காவியம் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதே போல் பாவேந்தர் பாரதிதாசனும், வீரத் தமிழன் என்ற தலைப்பில், இராவணனை வாழ்த்தி ஒரு பாடலும் பாடி இருப்பார். இதே போல் இராமாயணத்திற்கு பதில் சொல்லும் விதமாக, இராவணனை கதைத் தலைவனாகக் கொண்டு, ஆனந்த் நீலகண்டன் அவர்கள் அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் என்ற ஒரு புத்தகத்தையும் எழுதி இருப்பார்.
இராவணனை வில்லனாகப் பார்ப்பது, வட நாட்டு ஆரியர்கள் தான். இந்தியாவில் இருக்கும் பல பழங்குடியின மக்களும், இலங்கையில் உள்ளவர்களும் இராவணனைக் கடவுளாாக தான் பார்க்கிறார்கள். ஏன், இந்தியாவில் உத்திரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இராவணனுக்கு இன்னும் கோயில்கள் இருக்கின்றன. மக்கள் வழிபட்டுக் கொண்டு தான் வருகிறார்கள். குறிப்பாக, கோண்டு என்ற பழங்குடி இன மக்கள் இராவணனைத் தங்கள் வாரிசு என்று அறிவித்துக் கொண்டு, இராவணனை கடவுளாக வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் தசரா பண்டிகை அன்று துக்கம் அனுசரிப்பார்கள். ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பது நாம் எந்தப் பக்கத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்துத் தான். நம் சங்க கால தமிழ் மன்னர்களில் தலை சிறந்த மன்னர் இராவணன் தான். இராவணனின் புகழ் என்றும் ஓங்குக.
Beatmark Download
Effect Download
0 Comments