சேரன் செங்குட்டுவன் | சேரன் செங்குட்டுவன் வாழ்க்கை வரலாறு தமிழ்

 இன்று நாம் சேரர் வம்சத்தில் மிகச் சிறந்த மன்னனான சேரன் செங்குட்டுவன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

செங்குட்டுவன் சேர நாட்டைச் சேர்ந்த பழங்கால மன்னர். அன்றைய வஞ்சி இன்றைய கரூர் மாநகரம் பழங்காலத்து வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் சேரன் செங்குட்டுவன். இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும், தாய் நற்சோணைக்கும் பிறந்த செல்வ மகன். இந்தச் சேர மன்னனின் உடம்பில், சோழ ரத்தமும் ஓடியது எப்படி என்றால், அவரது தாய் நற்சோணை சோழர் குலத்தைச் சேர்ந்தவர்.

அதுமட்டுமில்லாது செங்குட்டுவன் கரிகாலச் சோழனின் மகள் வழிப் பேரன் என்றும் கூறப்படுகிறது. கேரளாவில் முசிறி என்ற துறைமுகம் வழியாகக், கிரேக்கர்களிடம் வணிகம் செய்து வந்தார் சேரன் செங்குட்டுவன். மிளகிற்கு கிரேக்கத் தங்கம் வணிகம் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டு அவரது நாட்டில் செல்வம் வளம் கொழித்தது. கடம்பர்களையும் மற்றும் பல மன்னர்களையும் போரில் வென்றது மட்டுமல்லாமல், அடைந்த வெற்றிகளின் சின்னமாகத் தான் தோற்கடித்த ஏழு மன்னர்களின், மகுடங்களை உருக்கி மாலையாக வீரம் வழியாக அணிந்தவர் மாமன்னர் செங்குட்டுவன்.

அவர் தன்னுடைய நீண்ட கால ஆட்சியில், 50 வருடங்களைப் போருக்காகத் திட்டம் தீட்டுவதிலும், செயல்படுத்துவதிலும் கழித்தார். செங்குட்டுவனின் இளைய சகோதரரான இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரமும், சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தும் செங்குட்டுவனின், புகழைப் பாடுகிறது. ஒரு நாள் செங்குட்டுவனின் தந்தை அரியணையில் அமர்ந்திருக்க, ஒரு ஜோதிடர் அரசவைக்கு வருகிறார். அரசியும், இளவரசர்களும், மந்திரிகளும் சூழ்ந்திருந்த அந்த அரசவையில், மன்னர் சீக்கிரமே இறந்து விடுவார் என்றும், அதன்பின் இளையவரான இளங்கோவடிகள் அரியணை ஏறுவார் என்றும் அந்த ஜோதிடர் அறிவிக்கிறார்.

அண்ணனை மிகவும் நேசித்த இளங்கோவடிகள், இந்த ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கடுங்கோபம் அடைகிறார். தந்தைக்குப் பின் தகுதியுள்ள, அண்ணன் இருக்க தான் அரியணை ஏறுவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என உடனே துறவறம் பூண்டு சமணத் துறவி ஆகிறார். மற்றொரு நாள் மலைவாழ் மக்களைச், செங்குட்டுவன் சந்திக்க சென்றபோது, அங்கு உயிர் நீத்த கண்ணகி என்ற பெண்ணைப் பற்றி அறிகிறார். புலவர் சீத்தலை சாத்தனார் செங்குட்டுவனுக்கும், அவரது மனைவிக்கும் கண்ணகியின் வாழ்க்கை வரலாறுபற்றி எடுத்துரைக்கிறார். தன் குற்றமற்ற கணவருக்குப் பாண்டிய மன்னன் இழைத்த, அநீதியினால் மதுரையை எரித்த கண்ணகியின், சோக கதையைக் கேட்டுச் செங்குட்டுவனின் மனைவி, மனம் உருகுகிறாள்.

கண்ணகிக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற தனது ஆசையை மன்னன் செங்குட்டுவனிடம் முன் வைக்கிறாள். தன் மனைவியின் கோரிக்கைக்கு இசைந்த, செங்குட்டுவன் கண்ணகியின் உருவச் சிலையை, வடிக்க இமயமலையிலிருந்து ஒரு கல்லைப் பெயர்த்து எடுத்து வர முடிவெடுக்கிறார். தன் படைகள் அனைத்தையும் திரட்டி வடக்கு நோக்கிச் செல்கிறார். பல போர்களுக்குப் பின், வடக்கே உள்ள அரசர்களான கனகர் மட்டும் விஜயரைத் தோற்கடிக்கிறார். அந்த அரசர்களையே இமயமலையிலிருந்து ஒரு கல்லைச் சுமந்து வரச் செய்து, அதைக் கங்கையில் நீராட்டுகிறார்.

32 மாதங்களுக்குப் பின் தன் சேர நாட்டுக்குத் திரும்பிக் கண்ணகி கோவிலைப் பிரம்மாண்டமாகக் கட்டி முடித்துக் கும்பாபிஷேகம் செய்கிறார். இன்றைய கேரள தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள தேக்கடியில் மேற்கு தொடர்ச்சி மலையில், உச்சியில் 4386 அடி உயரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. ஆனால் செங்குட்டுவனின் மகத்தான கண்ணகி கோவில் இன்று, கவலைக்கிடமாக அழிந்த நிலையில் உள்ளது. தன்னுடைய போர் வெற்றிகளாலும், கண்ணகியின் கோவிலாலும் செங்குட்டுவனை இந்த உலகம் என்றும் மறக்காது. சேர மன்னர்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மன்னர் இந்தச் சேரன் செங்குட்டுவன்.

இவரின் ஆட்சிக் காலத்தில் சேர மக்கள் அனைவரும் மிகவும் செல்வச்செழிப்பாக, மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். சோழ மன்னர் கரிகால சோழனின் பேரன் தான் இந்தச் சேரன் செங்குட்டுவன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும், வேள் ஆவிக் கோமான் பதுமன் என்ற மன்னனின் மகளுக்கும் பிறந்தவர் நார்முடிச்சேரல். இவர் தான் முதல் மனைவிக்குப் பிறந்தவர். செங்குட்டுவன் அண்ணன். நெடுஞ்சேரலாதனுக்கும் இரண்டாவது மனைவி நற்சோணைக்கும் பிறந்தவர்கள் செங்குட்டுவன், இளங்கோவடிகள்.

சேரன் செங்குட்டுவன் தனது தாய் தந்தை மீதும், சகோதரர்கள்மீதும், சேர நாட்டின் மக்கள்மீதும், அளவு கடந்த அன்பும், பாசமும், மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். இவர் தன் தந்தை மறைவுக்குப் பின், சேர நாட்டின் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். இவர் மொத்தம் 55 ஆண்டுகள் சேர நாட்டை ஆட்சி செய்தார். தன் வாழ்நாளில் பல ஆண்டுகள் போர் தொடுத்தே காலத்தைக் கழித்தவர். இவர் தன் வாழ்நாளில் ஒரு முறை கூடப் போரில் தோற்றதே கிடையாது. இந்த உலகில் மிகச் சிறந்த மன்னர்களில் மிக முக்கியமான மன்னர் சேரன் செங்குட்டுவன். இந்த உலகம் இருக்கும் வரை, சேரன் செங்குட்டுவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.


Effect Download

Post a Comment

0 Comments