அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் பூமி ஆறாவது அழிவை நோக்கிச் செல்கிறதா? மனித இனம் ஆபத்தில் இருக்கிறதா? என்பதை பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்தப் பூமியில் உயிர் வாழ்வதற்கு, மனிதர்களாகிய நமக்கு எந்த அளவு உரிமைகள் இருக்கிறதோ, அதே அளவிற்கு மற்ற உயிரினங்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், மனிதனின் பேராசையால் இந்தப் பூமியில் உயிர் வாழும், அனைத்து உயிரினங்கள் எந்த அளவிற்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை பற்றித் தான் இந்தப் பதிவில் முழுமையாகப் பார்க்கப் போகிறோம்.
சூரியனிடமிருந்து பிரிந்து, நம் பூமியில் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்ததற்கு பிறகு, நம் பூமியில் பல மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றது. உயிரினங்கள் தொடர்ந்து தோன்றுவதும், அழிவதும் தான் மாறி, மாறி நடந்து கொண்டு இருக்கிறது. இந்தப் பூமியில் இதுவரை ஐந்து முறை பேரழிவுகள் நடந்திருக்கிறது. இந்தப் பேரழிவுகளுக்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தோமேயானால், பூமியின் மேல்த் தகடு நகர்வோ இல்லை எரிமலை வெடிப்பு போன்றவை தான் காரணமாக இருந்திருக்கிறது.
இப்படி பூமியில் ஒவ்வொரு பேரழிவுகள் நடக்கும்போது, உயிரினங்கள் மொத்தமாகவோ, ஒரு சில உயிரினங்கள் தவிர்த்தோ, அழிந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு பேரழிவில் தான், டைனோசரஸ் என்ற உயிரினம் மொத்தமாக அழிந்து போயிருக்கிறது. இந்த அழிவுகள் எல்லாமே, பல வருட மில்லியன் இடைவெளியில் நடந்திருக்கிறது. இதனால் ஒரு சில உயிரினங்கள், பரிணாம வளர்ச்சி அடைந்து, மற்ற உயிரினங்களாக மாறி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பரிணாம வளர்ச்சியில் தான் நம் மனித இனமும் தோன்றியது.
ஆனால், நம் பூமி ஆறாவது பேரழிவை நோக்கி வேகமாக நகர்ந்து சென்று, கொண்டிருக்கிறது என்று ஒரு அதிர்ச்சியான தகவலைச் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த முறை இந்தப் பேரழிவிற்கு காரணம், பூமித் தட்டு நகர்வு அல்லது எரிமலை வெடிப்போ கிடையாது. மாறாக, இதற்கு முழுக்க முழுக்கக் காரணம் ஹோமோசேப்பியன்ஸ். அதாவது, மனித இனம் தான்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய சுற்றுச்சூழல் மாநாட்டில், கிட்டத் தட்ட ஐம்பது நாடுகளைச் சேர்ந்த, 145 ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார்கள். இதில் தான் இந்த அதிர்ச்சியான தகவலையும் சொல்லி இருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி அறிக்கையின் படி, இப்பொழுது நம் பூமியில் இருக்கும் 80 லட்சம் உயிரினங்களில், 10 லட்சம் உயிரினங்கள் இன்னும் சில வருடங்களில் மொத்தமாக அழிந்து விடும் என்று கூறியிருக்கிறார்கள். இதிலும் குறிப்பாக, நம் பூமியில் உயிர் வாழும் தவளை, பாம்பு போன்ற இரு வாழ் உயிரினங்களான 40 சதவீதமும், பாலூட்டி வகையில் மூன்றில் ஒரு பகுதியும் அழிந்து விடும் என்று சொல்லி இருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல், 33 சதவீதம் பவளப் பாறைகள் மொத்தமாக அழிந்து விடும் என்றும் கணித்திருக்கிறார்கள்.
இதனால் மிகவும் பாதிக்கப்படுவது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய விலங்கினங்கள் தான். ஏன், அப்படி என்றால் அதாவது, இந்தப் பெரிய விலங்கினங்களான யானை, காண்டாமிருகம் போன்ற விலங்கினங்கள் இனப் பெருக்கம் செய்வதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால், வேகமாக மாறி வரும் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது போல் அந்த விலங்கினங்களால் தங்களை தகமைத்துக் கொள்ள முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகின்றன. இப்படிப்பட்ட பேரழிவிற்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்ற ஐந்து முக்கியமான காரணங்கள் என்னென்னவென்று இப்போது பார்க்கலாம்.
முதலாவது, நிலம் மற்றும் கடல் பயன்பாட்டில் மாற்றம். அதாவது, தொழில் புரட்சிக்குப் பிறகு, 75 சதவீதம் நிலப் பகுதியையும், 66 சதவீதம் கடல் பகுதியும் மனிதர்களாகிய நாம் மாற்றி அமைத்து விட்டோம். காடுகளை அழித்து விவசாய நிலங்களாக மாற்றியது. நதிகளின் குறுக்கே அணைகள் கட்டியது. இவைகள் எல்லாமே இதில் அடங்கும்.
இரண்டாவது, உயிரினங்களை நேரடியாகச் சுரண்டல். அதாவது, உயிரினங்களை உணவுக்காகவோ அல்லது வேறு ஏதாவது பயன்பாட்டிற்காகவோ, நேரடியாக வேட்டையாடுவது. குறிப்பாகத், தந்தம், கொம்பு, பல், தோல், போன்றவைகளுக்காக யானை, புலி, காண்டாமிருகம் போன்றவற்றை வேட்டையாடுதல். இதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு கடலில் வாழும் மீன்களில் மூன்றில், ஒரு பகுதி மீன்களை ஒட்டு மொத்தமாகப் பிடித்து உணவாகப் பயன் படுத்தி இருக்கிறோம்.
மூன்றாவது காரணம், பருவநிலை மாற்றங்கள். இந்தப் பருவநிலை மாற்றங்கள் மட்டுமே, பாதிக்கு மேற்பட்ட பாலூட்டி இனங்களும், நான்கில் ஒரு பங்குப் பறவை இனங்களும் அழிவின் விளிம்பில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நான்காவது காரணம், சுற்றுச்சூழல் மாசு. இதில் நாம் வெளியிடும் புகை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும் அடங்கும். 1980ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாம் கடலில் கொட்டும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்து இருக்கிறது. அதாவது, வருடத்திற்கு 300 முதல் 400 மெட்ரிக் டன் அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகளை நாம் கடலில் கொட்டிக் கொண்டே இருக்கிறோம்.
ஐந்தாவது மற்றும் கடைசி காரணம் என்னவென்றால், அந்நிய இனங்களின் ஊடுருவல். இது என்னவென்றால், அதாவது, பல புதிய பூச்சி இனங்கள் வேறொரு நாட்டிலிருந்து வந்து, வேறொரு நாட்டில் உள்ள பயிர் வகைகளைத் தாக்கி அழிப்பது. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒவ்வொரு நாட்டிலும் இந்த மாதிரி புதிய வகை பூச்சிகளின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். நான் இதுவரைக்கும் கூறிய ஐந்து காரணங்களுக்கும் பொதுவான ஒரு காரணம் இருக்கிறது.
அது என்னவென்றால், நான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் கூறியது போல் மனிதனின் பேராசை தான். மனிதர்களாகிய நாம் இதுவரைக்கும் தெரிந்தே, பல உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கிறோம். இதில் முதலில் வருவது யானைகள். யானைகளின் தந்தத்திற்காக மட்டுமே வருடத்திற்கு, ஒரு லட்சத்திற்கு அதிகமான யானைகள் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் 30 லட்சத்திலிருந்து 50 லட்சத்திற்கும் மேல் இருந்த ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை, இன்று 4 லட்சத்து 15 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது. கிட்டத் தட்ட 80 சதவீதத்திற்கும் மேல், யானைகளைத் தந்ததற்காக மட்டுமே கொன்று இருக்கிறோம்.
இதற்கு அடுத்தப் படியாக வருவது காண்டாமிருகம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கிட்டத் தட்ட ஐந்து லட்சத்திற்கும் மேல் காண்டாமிருகங்கள் இந்த உலகத்தில் இருந்தன. ஆனால் இப்பொழுது ஆயிரக்கணக்கில் மட்டும் தான் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அதன் கொம்புகளை நாட்டு வைத்தியத்தில் ஆண்மை குறைவுக்கு நாம் மருந்தாகப் பயன்படுத்துவது தான். கடந்த இரண்டு வருடங்களில் மலேசியாவைச் சேர்ந்த சுமித்ரா வகை காண்டாமிருகமும், ஆப்பிரிக்காவை சேர்ந்த நாதன் ஒயிட் ஆண் இனத்தைச் சேர்ந்த காண்டாமிருகமும் இந்த இரண்டு காண்டாமிருகங்களும் இறந்து விட்டன. இந்த இரண்டு இனத்திலும் ஒரு சில பெண் காண்டாமிருகங்கள் மட்டும் தான் இப்பொழுது பூமியில் உயிரோடு இருக்கின்றன. இதுவும் இறந்த பிறகு, அதன் மொத்த இனமும் அழிந்து விடும். இதில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
இதே போல் பல உயிரினங்கள், அதன் உடல் பாகங்களுக்காக வேட்டையாடப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதைத் தடுப்பதற்கு அரசாங்கங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அவை எதுவுமே நல்ல முறையில் பலன் அளிக்கவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, உணவுக்காக உயிரினங்கள் வேட்டையாடப்படுவதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஏதாவது, ஒரு இனம் முற்றிலும் அழிந்து போகும் அளவிற்கு உயிரினங்கள் வேட்டையாடப்பட்டு வருகிறது.
இதில் மிக முக்கியமானது திமிங்கல வேட்டை. 19 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு, திமிங்கலங்களை அதன் இறைச்சி மற்றும் எண்ணெய்க்காக வேட்டையாடப்படுவது மிகவும் அதிகரித்து விட்டது. ஒரு காலத்தில் அதன் இனமே அழிவும் அளவிற்கு சென்று விட்டது. இதனால் 1986 ஆம் ஆண்டு சர்வதேச திமிங்கல ஆணையம் திமிங்கலங்கள் உணவுக்காக, வேட்டையாடப்படுவதை தடை செய்தது. இதற்கு அனைத்து நாடுகளும் சம்மதமும் தெரிவித்தது. ஆனால், இப்பொழுது கிட்டத் தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பான் இந்தத் தடையும் மீறித் திமிங்கங்களைப் பிடிப்பதற்கு வணிக ரீதியாக அனுமதி அளித்திருக்கிறது. இதன் படி ஒரு வருடத்திற்கு 227 திமிங்கலங்கள் கொல்லப்படும். இதற்குப் பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதே போல் சுறா மீன்களும் அதன் துடுப்புகளுக்காக அதிக அளவு வேட்டையாடப்படுகிறது. ஷார்க் பின் சூட் என்பது உலகளவில் மிகவும் பிரபலமானது. இதற்காகவே, உலகத்தில் ஒரு வருடத்திற்கு ஏழரை கோடி முதல் 10 கோடிவரை சுறா மீன்கள் வேட்டையாடப்படுகின்றன. இதில் ஒரு கொடுமை என்னவென்றால், ஒரு சுறா மீனைப் பிடித்து அதன் துடுப்புகளை எடுத்துக் கொண்ட பிறகு, அந்த மீனை மீண்டும் அப்படியே கடலில் போட்டு விடுவார்கள். எவ்வளவு கொடுமை பாருங்கள். கடந்த மாதம் கனடா இந்தச் சார்க் மீன் வணிகத்தை மொத்தமாகத் தடை செய்து விட்டார்கள்.
இதே போல் விலங்குகளின் வாழ்விடங்களாக இருக்கும் காசுகளை அழித்து, விவசாய நிலங்களோ அல்லது குடியிருப்புப் பகுதிகளோ உருவாக்குவதால் பல உயிரினங்கள் இன்று அழிவின் விளிம்பில் இருக்கிறது. இதற்கு உதாரணமா இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் பாமாயில் பயிரிடுவதற்காக, அங்கு இருக்கும் போர்னியோ என்ற மலைக் காடுகளைப் பெருமளவு அழித்து விட்டார்கள். இதனால் மட்டுமே கடந்த 16 வருடத்தில் உரா ஊட்டான் வகைக் குரங்கு இனங்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் இறந்து போயிருக்கிறது. இந்த உரா ஊட்டான் வகைக் குரங்கிற்கும், நமக்கும் 97 சதவீதம் டி.என்.ஏ ஒரே மாதிரி தான் இருக்கும். வெறும் மூன்று சதவீதம் மட்டும் தான் வித்தியாசம் இருக்கும். இந்த மூன்று சதவீதம் வித்தியாசம் வரும் ஜீன், நம்மை எந்த அளவிற்கு கொடூரமாக மாற்றி இருக்கிறது என்று பாருங்கள்.
இதே போல் குளோபல் வார்மிங்கினால் பனிக்கட்டிகள் மிகவும் அதிக அளவில் உருகிக் கொண்டே வருகிறது. இதனால் இந்தப் பனிக் கட்டிகளைச் சார்ந்து வாழக்கூடிய பனிக்கரடி, பெண் குயின், வால்ரஸ், சீல் போன்ற உயிரினங்கள் மிகவும் வேகமாக அழிந்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, இந்தப் பனிக் கரடிகள் தான் குளோபல் வார்மிங்கினால் மிகவும் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏனென்றால், இதன் இரை சீல் போன்ற விலங்கினங்கள். இதனால் போதிய அளவு பனிக்கட்டி இல்லாததால், இதன் இரை கடலில் குதித்து தப்பித்துச் சென்று விடும். இதனால் இதற்குச் சரியான உணவு கிடைக்காமல் பட்டினியாக இருந்து பல பனிக் கரடிகள் உயிரை விட்டு இருக்கிறது.
இதே போல் வால்ரஸ் உயிரினமும் பனிக் கட்டிகளைச் சார்ந்து வாழக்கூடியது. ஆனால், குளோபல் வார்மிங்கினால் பனிக் கட்டிகள் வேகமாகக் குறைந்து கொண்டு வருவதனால், அதற்கு ஓய்வு எடுப்பதற்குச் சரியான இடம் கிடைக்காமல், அதன் அருகில் இருக்கும் மலை உச்சிக்குச் சென்று, திரும்பி வருவதற்கு வழி தெரியாமல், தண்ணீரில் குதிப்பதாக நினைத்து மழை உச்சியிலிருந்து பாறையின் மீது குதித்து அடிபட்டு இறந்து விடுகின்றன. இப்பொழுது நான் மேலே கூறிய, இரண்டு கருத்துக்கள் பருவநிலை மாற்றத்தின் கொடூரத்தை உங்களுக்குத் தெளிவாகப் புரிய வைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
இதுவரைக்கும் நான் கூறிய, விலங்கு இனங்கள் அனைத்தும், இப்பொழுது அழியப் போகும் நிலையில் புள்ளி ஒரு சதவீதம் தான். இதே போல் பல விலங்கினங்கள், தங்கள் வாழ்விடங்களை இழந்து அழிவை நோக்கி மிகவும், வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் மனிதனின் பேராசை தான் மிக முக்கியமான காரணமாகும். இதைக் கூறிய உடனே, மனிதர்களாக நமக்கு மிகவும் கோபம் வரலாம். ஆனால், நாம் ஒத்துக் கொண்டாலும், இல்லாவிட்டாலும் இது தான் நிதர்சனமான உண்மை. இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் இந்தப் பேரிரழிவிற்குக் காரணம். இப்பொழுது கூட பெரிதாக ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நாம்மால் எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு வளங்களை குறைவாக பயன்படுத்தினால், இந்தப் பேரழிவை கொஞ்ச நாட்களுக்கு தள்ளிப் போடலாம். ஒரு விஷயம் மட்டும், நாம் எல்லோரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
அது என்னவென்றால், இந்த பூமியை நாம் பாதுகாக்க தேவையில்லை. இந்த பூமியே தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும். நாம் சொல்லும் இத்தனை விஷயங்களும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளத்தான். இந்த பூமியில் மனிதன் இல்லாமல், பிற உயிரினங்கள் மிகவும் சிறப்பாக வாழும். ஆனால், பிற உயிரினங்கள் இல்லாமல் மனிதனால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. கடைசியாக ஒரு செவ்விந்தியப் பழமொழியோடு இந்த பதிவை நான் முடித்துக் கொள்கிறேன். இந்த பூமியை நம் முன்னோர்களிடமிருந்து பரம்பரை சொத்தாக நாம் பெறவில்லை. நம் பிள்ளைகளிடமிருந்து கடனாக பெற்றுள்ளோம்.
Beatmark Download
Effect Download
0 Comments